தொழில் புரிவதற்கான உரிமை – பெண்கள், ஆண்கள் மற்றும் பால்நிலைசார் தொழிலாளர்

டெஹானி ஆரியரட்ன, தெற்காசிய மகளிர் நிதியம்

இலங்கையின் பொருளாதாரமானது பெண்களின் முதுகுகளினாலேயே சுமந்து செல்லப்படுகின்றது என்பது இரகசியமான ஒன்றல்ல. அவர்கள் குறைந்த ஊதியம் பெறுகின்ற, பாதுகாப்பற்ற, முறைசாரா தொழிற்துறைகளில் பணியாற்றி வருபவர்களாக மட்டுமன்றி, ஏனையவர்களும் தொழில் புரிவதற்குச் சாதகமான சூழலொன்றைத் தோற்றுவிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அதாவது, சமையல் செய்தல், சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடல், குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற இன்னோரன்ன பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற தாய்மார்கள், பாட்டிமார்கள், சகோதரிகள், திருமணமாகாத மகள்மார்கள் போன்றோர் தொழிலாளர் படையணி பற்றிய புள்ளிவிபரங்களில் “வேலையற்றவர்கள்” என்று மாத்திரமே வகுப்பாக்கம் செய்யப்படுகின்றனர். தொழிலாளர்கள் குறித்த இந்தப் பால்நிலைப் பிரிப்பும், பாரியளவிலான பால்நிலைப் பாரபட்சமும் எமது சமூகத்தினுள் ஆழமாக ஊடுருவி செயற்பட்டு வருவதோடு, அவை, பெண்கள் என்பவர்கள் உயிரியல் ரீதியில் குழந்தை வளர்ப்புக்கே மிகவும் பொருத்தமானவர்கள், வீட்டு வேலைகளுக்கே அதிகம் லாயக்கானவர்கள் மற்றும் வீட்டுச் செலவுகளை முகாமை செய்வதற்கே இயலுமானவர்கள் போன்ற தொன்மையான கருத்துக்களால் முட்டுக்கொடுக்கப்பட்டும் வருகின்றன. மேலும், பிள்ளைகளைப் போஷித்துப் பாதுகாப்பதற்கும், கணவனுக்கு பாலியல் ரீதியான நேரடி அணுக்கத்தை வழங்குவதற்கும் மற்றும் வீட்டின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பதற்குமான ஒரு கருவியே பெண்கள் என்று, ஒரு கருவிப்பொருள் சார்ந்த கண்ணோட்டத்தில் அவர்கள் நோக்கப்படுவதற்கும்கூட இது வழிவகுக்கின்றது. இந்த அழகிய காட்சிகளுக்குள், பெண் என்பவள் உரிமைகள், கௌரவம், இலட்சியம், கனவுகள் மற்றும் தேவைகள் என்பவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு ஜீவன் என்ற யதார்த்தம் அப்படியே புறக்கணிக்கப்பட்டு விடுகின்றது.

நெறிசார்ந்த ஒரு கண்ணோட்டத்துடன் பெண்ணிலைவாதக் கண்ணோட்டம் முரண்படுகின்ற குறிப்பான சந்தர்ப்பங்களின் போது, “வேலை” என்பது எதனை உள்ளடக்குகின்றது மற்றும் பெண்களின் தொழில் போன்ற விடயங்கள் தொடர்ந்தும் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டவையாகவே உள்ளன. கடந்த காலங்களில் பெண்களினதும், பெண்களுக்கானதுமான தொழில்கள் அதிகரித்துள்ள போதிலும், அதிகளவான சதவீதத்தினர் தொழிலாளர் படையணிக்கு அப்பாற்பட்டவர்களாக அல்லது பொருளாதார ரீதியில் செயலற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையினுள், பால்நிலை சார்ந்த தொழிலாளர்கள் (gendered labour) பற்றிய பாரிய பிரச்சினைகள், பராமரிப்புசார் பொருளாதாரத்தை (care economy) மதிப்பிடுதல் மற்றும் பெண்களின் தொழிலுக்கு இடையூறாக அமைகின்ற கட்டமைக்கப்பட்டதும் நிறுவன மயப்படுத்தப்பட்டதுமான தடைகள் என்பன ஆய்வு செய்யப்பட வேண்டியவைகளாகக் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கென புலம்பெயர் பெண்கள் மீதும், அவர்களின் நடமாட்டம், தொழில் மற்றும் வருமானம் என்பவற்றின் மீது மட்டுப்பாடுகளை விதிக்கின்ற குறிப்பிட்டுக் கூறக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட தடைகள் மீதும் எனது கவனக்குவிவைச் செலுத்தவுள்ளேன்.

குடும்பப் பின்னணி அறிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பெண்களின் புலம்பெயர்வானது 1990களில் உச்ச நிலையை அடைந்திருந்தது. எனினும் 2000ஆம் ஆண்டுகளில் அது குறைவடைந்து வந்துள்ளதோடு, வெளிநாட்டு வேலை நிமித்தம் நிகழ்கின்ற சமகால ஒட்டுமொத்தப் புலம்பெயர்வில் 40.3% ஆகவும் அது உள்ளது.[1] தேர்ச்சியற்ற மட்டத்திலமைந்த தொழில்கள் (unskilled level jobs) மற்றும் வீட்டுப் பணிப்பெண் தொழில்கள் ஆகிய இரு வகைப்பட்ட தொழில்களின் பொருட்டே அதிகளவான பெண்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.[2] புலம்பெயர்ந்து பணியாற்றும் பெண்களுள் சுமார் 88% ஆனோர் வீட்டுப் பணிப்பெண்களாகவே தொழில்புரிவதுடன், அவர்களுள் பெரும்பான்மையானோர் மத்திய கிழக்கு நாடுகளிலேயே பணியாற்றுகின்றனர்.[3] அதேபோன்று, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களுள் சுமார் 60% ஆன தொகை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே அனுப்பப்படுகின்றது.[4] புலம்பெயர்ந்து வீட்டுப் பணிப்பெண்களாகத் தொழில் புரிவோர் அனுப்புகின்ற பணம் அதில் கணிசமான சதவீதமாகும்.

இவ்வாறன ஒரு சட்டகத்தினுள், பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதை இலங்கை அரசாங்கமானது நேரடியாகவும் மறைமுகமாகவும் மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தியே வருகின்றது.[5] தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு புலம்பெயர எதிர்பார்க்கும் ஒரு பெண், அவ்விதம் புலம்பெயர முடியுமா இல்லையா என, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் பரிந்துரைத்து சமர்ப்பிக்கும் குடும்பப் பின்னணி அறிக்கை எனும் ஓர் அறிக்கை மூலம் மிகக் குறிப்பான வஞ்சக முறையில் இதனை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2015 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “5 வயதுக்குட்பட்ட பிள்ளையைக் கொண்டுள்ள தாய்மார்கள் புலம்பெயர்வுக்கென பரிந்துரை செய்யப்படுதலாகாது. மேலும், 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளையைக் கொண்டுள்ள தாய்மார்களால் அப்பிள்ளையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமாக இருந்தால் மாத்திரமே அத்தகைய புலம்பெயர்வுக்கென அவர்கள் பரிந்துரை செய்யப்பட முடியும்”[6]என வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், “மாற்றுத் திறனாளியான பிள்ளையொன்றைக் கொண்டுள்ள தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கென பரிந்துரை செய்யப்படுதலாகாது” எனவும் குறித்த சுற்றறிக்கை குறிப்பிடுகின்றது. ஏலவே, சில வருடங்களாக, இத்தகைய மட்டுப்பாடுகள் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கெனப் புலம்பெயரும் பெண்கள் மீது அமுல்படுத்தப்பட்டே வந்துள்ளது. எனினும், அண்மைய சுற்றறிக்கையானது தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் அனைத்துப் பெண்களையும் உள்ளடக்கும் விதத்தில் மேற்படி பிரமாணங்களை நீட்சியடையச் செய்துள்ளது. அத்தோடு குறித்த அமைச்சின் சுற்றறிக்கையில் எந்தவோர் இடத்திலும் “தந்தை” என்ற சொற்பதம் பிரயோகிக்கப்படாமையானது, பிள்ளை மீது தந்தைமார்களுக்கு எவ்வித கடமைகளும் பொறுப்புக்களும் இல்லையெனும் அர்த்தத்தை சம்பூரணமாக வழங்குகின்றது.

தாய்மார்கள் என்றால் பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள், தந்தையர்களே குடும்பத்துக்காக உழைக்க வேண்டியவர்கள் மற்றும் வீடுதான் பெண்களுக்குரிய இடம் போன்ற ஆணாதிக்க பால்நிலைசார் வகிபாகங்களில் இருந்து ஒரு பகுதியும், சிறுவர் துஷ்பிரயோகம் அறிக்கையிடப்படும் விகிதம் அதிகரித்துள்ளமைக்கும் பிள்ளைகள் மீது கரிசனை காட்டுவதில் கவனயீனமாக இருக்கும் தாய்மார்களுக்கும் – “காணாமற்போன தாய்மார்கள்” எனும் அபூர்வமான தோற்றப்பாட்டுக்கும் – இடையே தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளில் இருந்து ஒரு பகுதியுமென தோன்றியவையே இத்தகைய மட்டுப்பாடுகள் ஆகும். சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதற்கும், உண்மையான குற்றவாளிகள் அசட்டை செய்யப்படுவதற்கும், இவ்வாறான குற்றங்களைத் தடுத்து நிறுத்தி அவற்றுக்கெதிராக வழக்குத் தொடர்ந்து சிறுவர்களின் ஒட்டுமொத்த நலன்களையும் உத்தரவாதப்படுத்துவதற்கு அரசுக்குள்ள வகிபாகம் புறக்கணிக்கப்படுவதற்கும், தத்தமது வீடுகளில் இல்லாத பெண்களென வரைவிலக்கணப் படுத்தப்பட்டு புலம்பெயர் பெண்களே இலகுவில் பலிக்கடாக்களாக ஆக்கப்படுகின்றனர்.

குறித்த சுற்றறிக்கையானது பிள்ளை வளர்ப்பு, அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான பொறுப்புக்களை முற்றுமுழுதாக பெண்களின் தோள்களில் மாத்திரமே சுமத்துவதன் மூலம் சமூகத்தில் நிலையூன்றிப் போயுள்ள இத்தகைய பால்நிலைசார் தவறான மனப்பதிவுகள் (gendered stereotypes) என்றென்றும் நிலைத்திருக்க வழிசமைக்கின்றது. பால் அடிப்படையிலான பாரபட்சம் காட்டப்படுதலாகாது (உறுப்புரை 12) மற்றும் சட்டரீதியான எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுவதற்கான சுதந்திரம் சகல பிரஜைகளுக்கும் உண்டு (உறுப்புரை 14.1) ஆகிய அரசியலமைப்பின் இரு ஏற்பாடுகளையும் மேற்படி சுற்றறிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது.

அரசின் வகிபாகம்

சிறுவர்களின் உடல் ரீதியானதும் உணர்வு ரீதியானதுமான நலன்கள் மீது அக்கறை செலுத்துவதற்கு அரசுக்குள்ள பொறுப்பானது, பெண்களின் நடமாட்டத்தை நியாயமற்ற முறையில் மட்டுப்படுத்தியுள்ளதோடு, தொழில் செய்வதற்கு அவர்களுக்குள்ள உரிமையையும் மீறச் செய்துள்ளது. ஆகக்குறைந்தது மேற்சொன்ன ஒரே காரணத்தின் அடிப்படையில், வீட்டுப் பணிப்பெண்கள் சார்ந்த தொழிலுக்கான 66% வாய்ப்புக்கள் பயன்படுத்தப்படவில்லை[7] என்பதோடு, அரசாங்கமானது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெறுவதிலிருந்து பெண்களை செயற்றிறன் மிக்க முறையில் தடுத்துக்கொண்டும் வருகின்றது. இது தமது விருப்பத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த தொழில் ஒன்றில் ஈடுபடுவதற்கு அவர்களுக்குள்ள உரிமையை மீறுகின்ற செயலாகும். அத்துடன், இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பெரும்பாலும் அவர்கள் இலங்கையில் பெறுகின்ற ஊதியத்தை விட உயர்ந்த ஊதியத்தையே அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு, அநேகமான சந்தர்ப்பங்களில் அப்பணமானது அவர்களது பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல் போன்ற தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் இது குறிப்பிட்டதொரு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எதிரான பாரபட்சமுமாகும். ஏனெனில், அத்தகைய பெண்களுள் பெரும்பாலானவர்கள் தமது குடும்பம், சமூகம் அல்லது அரசுடன் பேரம் பேசுவதற்கான குறைந்தபட்ச சக்தியைத்தானும் கொண்டிராத, பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றவர்களுமாவர். அநேக சந்தர்ப்பங்களில் புலம்பெயர்வும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் இப்பெண்களுக்கு அவர்கள் முன்னெப்போதும் பெற்றிராத பல வாய்ப்புக்களை வழங்குகின்றன. அதாவது, உயர்வான சம்பளம், பொருளாதார ஸ்திரத்தன்மை, வறுமையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு, வீட்டு வன்முறைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளல், அதிகாரத்தை / சக்தியை ஈட்டிக்கொள்ளல், பிரயாணத்துடன் இணைந்த சுதந்திரம் மற்றும் புதிய நாடுகளின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்பவை அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை ஆகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதியுயர்ந்த பொறுப்பொன்றையே அரசு கொண்டுள்ளது. மாறாக, தமது வீடுகளிலும் சமூகங்களிலும் பெண்கள் முகங்கொடுத்து வருகின்ற மட்டுப்பாடுகளை நிலைத்திருக்கச் செய்வதற்கானதும், அவற்றைப் பெருப்பிப்பதற்கானதுமான பொறுப்பொன்றை அல்ல.

குடும்பப் பின்னணி அறிக்கையும் அது தொடர்பான கொள்கைகளும் சிறுவர்களின் நலன்களை உறுதிப்படுத்தல், சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் அது மீறப்படுகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பில் அரசுக்குள்ள வகிபாகத்தை கருத்திலெடுக்கவும் தவறியுள்ளன. குற்றமிழைத்தவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் அளவுகடந்த தாமதம் (6 வருடங்கள் வரை)[8], சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளைக் கையாள்வதற்குப் போதியளவில் பணியாட் தொகுதியினரும் உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமை, குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றில் எது சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்துகின்றது என்பது பற்றிய போதிய அறிவும் தகவல்களும் இல்லாமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பொருட்டு நாட்டை விட்டுச் செல்கின்ற பெற்றோர்களுக்கான நிறுவன ரீதியானதும் சமூக ரீதியானதுமான ஆதரவு முறைமைகள் இல்லாமையென அனைத்துக் காரணிகளும் இந்த வன்முறை நிகழ்வதற்கான சூழலுக்கு பங்களிப்புச் செய்கின்றன.

தனது குடிமக்களின் உரிமைகளை மீறுவதில் இருந்து தவிர்ந்திருப்பதற்கும், சகல பிரஜைகளும் தமது உரிமைகளை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பிரயோகிப்பதற்குத் தேவையான பாதுகாப்புமிகு சூழலொன்றை உருவாக்குவதற்கும், மற்றும் குறித்த உரிமைகள் ஏனையோரால் மீறப்படும் போது அதுதொடர்பில் தலையீடு செய்வதற்குமான பொறுப்பொன்றை பெரும்பாலும் அரசே கொண்டுள்ளது.

விடுபட்ட தந்தைமார்களும் ஆண்களின் பொறுப்புக்களும்

குடும்பம் என்பது எமது சமூகத்தில் மிக முக்கியமானதோர் அலகாகக் கருதப்படுகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டே அதிகமான அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ஓர் ஆண்மகன் தனது குடும்பத்திலும், தன்னுடைய பிள்ளைகளின் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிலும் வகிக்க வேண்டிய வகிபாகத்தை அரசு ஏன் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றது? தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கான ஆண்களின் புலம்பெயர்வு அதிகரித்துள்ள படியினால், அத்தகைய புலம்பெயர்வானது அவர்களின் பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி எப்போதாவது அரசு அக்கறை செலுத்தியுள்ளதா? பெரும்பாலும் தந்தைமார்கள் அரசாங்கக் கொள்கைகளின் கண்களுக்குப் புலப்படாதவர்களாகவே இருந்து வருவதோடு, வெறுமனே வருமானம் ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு வகிபாகத்தையே அவை அவர்களுக்குக் கையளித்துள்ளது. அத்துடன் தந்தை என்ற ரீதியில் அவர்களுக்குள்ள அடையாளத்தையும், சந்தோஷங்களையும், அதனோடிணைந்த கடமைகளையும் பொறுப்புக்களையும் அவர்களிடமிருந்து அவை பறித்தெடுத்தும் உள்ளன. குடும்பத்திலிருந்தும், அரசாங்கக் கொள்கைகளில் இருந்தும், சமூகத்திலிருந்தும் விடுபடுவதற்கென எம்முன் தோன்றுபவர்களாகவே தந்தைமார்கள் உள்ளனர் என்ற நிதர்சனத்தை நான் உண்மையென ஏற்றுக்கொள்ள விழைகின்றேன். தந்தை என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய தந்தையர்கள் இலங்கைச் சமூகத்தில் உள்ளனரா?
துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கப்படுவதற்கும் சிறுவர்களின் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கும் அளிக்கப்படுகின்ற பதிலிறுப்பின் ஒரு பகுதியாக குடும்பப் பின்னணி அறிக்கை அமையுமாக இருந்தால், அத்தகைய துஷ்பிரயோகங்களை யார் மேற்கொள்கின்றனர் என்ற முக்கியமான கேள்விக்கு அது பதிலளிக்கின்றதா? குற்றமிழைப்பவர்கள் ஆண்களே என்றும், அநேகமான சம்பவ நிகழ்வுகளில் அவர்கள் பாதிக்கப்பட்டவரால் நன்கறியப்பட்ட நபர்களாகவே உள்ளனர் என்றும் பெரும்பாலான ஆய்வுகளும் செய்தி அறிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன.[9] எவ்வாறாயினும், குறிப்பாக இந்த விடயத்திலும், பரந்த அடிப்படையில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறை என்ற விடயத்திலும், “ஆண்கள் ஆண்களாகவே இருப்பர்” என்பது எழுதப்படாத விதியாக உள்ளதாகவே தோன்றுகின்றது. அதாவது, தமது செயல்களுக்கான பொறுப்பை ஆண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அத்தகைய தவிர்க்க முடியாத செயல்களில் இருந்து பெண்கள் தம்மையும், தமது பிள்ளைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாம். வன்முறைகளை இழைப்பதில் ஆண்கள் வகிக்கும் வகிபாகத்தைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அரசானது அத்தகைய வன்முறைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான மறைமுக அனுமதியை அவர்களுக்கு வழங்குகின்றது. உண்மையில், ஆண்களால் இழைக்கப்படுகின்ற பாலியல் வன்முறைகளுக்கான பிரதான காரணியாக உயர்ந்த மட்டத்திலான பாலியல் உரிமையும், விடுபாட்டுரிமையுமே காணப்படுவதாக ஆண்மைத்துவம் தொடர்பில் கெயார் (CARE) நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் (2013)[10] கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதென்பது ஒன்றும் புதியதொரு விடயமல்ல. பெண்களுக்கே உரித்தான பாலியல், இனவிருத்தி மற்றும் பொருளாதார சுதந்திரங்களை மட்டுப்படுத்துவதற்காக ஆண்களாலும் அரசுகளாலும் (அநேகமானவை ஆணாதிக்க நிறுவனமாக இருக்குமென கருதப்படுகின்றன) பல யுகங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தந்திரோபாய வேலையே அது. பணம், நடமாட்டம் மற்றும் சுதந்திரம் என அனைத்துமே பெண்களுக்கான சக்தியைக் கொடுக்கின்றன. அத்துடன், பெண்கள் மீது ஆண்கள் கொண்டிருக்கின்றதும், அவர்கள் மீது இடையறாது பிரயோகிக்கின்றதுமான கட்டுப்பாட்டையும் அவை தகர்த்தெறிகின்றன. எனினும், இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற இந்தப் படிமுறையானது, எமது சமூகத்தில் பெண்கள் முறைமைப்படுத்தப்பட்ட மார்க்கங்களில் பாரபட்சம் காட்டப்பட்டு, அடக்கியொடுக்கப்படுகின்ற பல வழிமுறைகளுள் மற்றுமொரு வழிமுறையே ஆகும்.

உசாத்துணை:
[1] Economics and Social Statistics of Sri Lanka 2014, CBSL, Table 3.13

[2] Ibid Table 3.15

[3] Migration profile 13-14

[4] Ibid, pg 33

[5] http://archives.dailynews.lk/2007/03/09/pol10.asp

[6] Ministry of Foreign Employment, Ministerial Circular 2015/1

[7] Migration Profile Sri Lanka, Ministry of Foreign Employment Promotion and Welfare, pg 34

[8] http://www.irinnews.org/fr/report/96361/sri-lanka-child-abuse-cases-stalled

[9] http://www.thesundayleader.lk/2009/10/31/shocking-child-abuse-stats/

[10] Broadening Gender: why masculinities matter, CARE

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s